PM Narendra Modi launches 3 gold schemes
PM Narendra Modi launches 3 gold schemes
மூன்று திட்டங்களை பிரதமர் மோடி நேற்று அறிமுகம் செய்தார்
புதுடில்லி:பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில், தங்கம் தொடர்பான, மூன்று புதுமையான திட்டங்களை நேற்று அறிமுகப்படுத்தினார். இந்த திட்டங்கள் மூலம், லாக்கர்களில் முடங்கி கிடக்கும் தங்கத்தை பணமாக்க முடியும்.
நம் நாட்டில், 20 ஆயிரம் - 23 ஆயிரம் டன், தங்கம் பயன்படுத்தப்படாமல் வீடுகளுக்குள் முடங்கி உள்ளன; இவற்றின் தற்போதைய சந்தை மதிப்பு, 60 லட்சம் கோடி ரூபாய். பயன்பாடு இல்லாமல் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் இந்த தங்கத்தை, பொருளாதார வளர்ச்சிக்காக பயன்படுத்தும் வகையில், மூன்று புதுமையான திட்டங்களை, பிரதமர் மோடி, ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இதன்படி, கையிருப்பில் உள்ள தங்கத்தை, வங்கிகளில் முதலீடு செய்து, அவற்றை பணமாக்க முடியும். இந்த மூன்று திட்டங்களையும், டில்லியில் நேற்று நடந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போது, இந்த திட்டங்கள் தொடர்பான இணையதளத்தை துவக்கி வைத்ததுடன், திட்டங்களில் முதலீடு செய்த ஆறு பேருக்கு, சான்றிதழ்களையும் வழங்கினார்.
என்னென்ன திட்டங்கள்
தங்க பத்திரம்,
தங்க டெபாசிட்,
தங்க நாணயம்
1. தங்கத்தை பணமாக்கும் திட்டம்
* இந்த திட்டத்தின்படி, பொதுமக்கள், தங்களிடம் உள்ள கச்சா தங்கம், தங்கக் கட்டிகள், தங்கக் காசுகள் ஆகியவற்றை டிபாசிட் செய்யலாம். டிபாசிட் செய்யப்படும் தங்கம், காரட் மதிப்பீடு செய்து ஏற்கப்படும்
* குறைந்தபட்சம், 30 கிராம் தங்கத்தை டிபாசிட் செய்ய முடியும். அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் டிபாசிட் செய்யலாம். இதற்கு, 2.5 சதவீத வட்டி கிடைக்கும்
* இதில், குறுகிய கால, டிபாசிட்டுகளை திரும்பவும் தங்கமாக மீட்கலாம் அல்லது மீட்கும் தேதியில் நிலவும் விலைக்கு நிகரமாக பணமாக பெறலாம்
* நடுத்தர மற்றும் நீண்டகால டிபாசிட்டுகளை, மீட்கும் தேதியில் நிலவும் விலைக்கு சமமாக பணமாக பெறலாம்.
2. தங்க பத்திர திட்டம்
* இந்த திட்டம், ரிசர்வ் வங்கி மூலமாக செயல்படுத்தப்படுகிறது. இந்ததிட்டத்தின் கீழ், தங்கத்தை நேரடியாக வாங்குவதற்கு பதில், பத்திரங்களாக வாங்கலாம்
* இதற்கு, 2.75 சதவீத வட்டி வழங்கப்படும். எட்டு ஆண்டு முதிர்வு காலத்துக்கு பின், பத்திரத்தை கொடுத்து விட்டு, அன்றைய விலை நிலவரப்படி, தங்கமாகவோ, பணமாகவோ பெற்றுக் கொள்ளலாம்
* குறைந்தபட்சமாக, 2 கிராமுக்கும், அதிகபட்சமாக, 500 கிராமுக்கும், இந்த திட்டத்தின் கீழ் பத்திரங்கள் வாங்க முடியும்
* தங்க பத்திரத்துக்கான விலை, கிராமுக்கு, 2,684 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது
* இந்த பத்திரங்களை பயன்படுத்தி, பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்ய முடியும். கடன்களுக்கும், இந்த பத்திரங்களை அடமானமாக பயன்படுத்த முடியும்.
3. தங்க நாணய திட்டம்
* இந்த திட்டத்தின் கீழ், ஒரு பக்கம், தேசிய சின்னமான அசோக சக்கரமும், மற்றொரு பக்கம் மகாத்மா காந்தி உருவம் பொறித்த தங்க நாணயங்கள் விற்பனை செய்யப்படும்.
* முதல் கட்டமாக, 5 மற்றும் 10 கிராம் தங்க நாணயங்களும், பின், 20 கிராம் தங்கக் கட்டிகளும் விற்பனை செய்யப்படும். போலி காசுகள் தயாரிக்க முடியாத வகையில், இந்த நாணயங்களில் பிரத்யேக பாதுகாப்பு அம்சங்கள் இடம் பெற்றிருக்கும்
* இந்த நாணயங்கள், 24 காரட் துாய்மையான தங்கமாகவும், 'ஹால் மார்க்'முத்திரையுடன் கூடியதாகவும் இருக்கும்
* இந்த நாணயத்துக்கு, முதல்முறையாக உள்நாட்டிலேயே அச்சிடப்பட்ட, தேசிய தங்க நாணயம் என்ற பெருமையும் உண்டு
* பொதுத்துறை நிறுவனமான, மத்திய உலோக மற்றும் கனிமவள கழகமான, எம்.எம்.டி., மூலமாக இந்த நாணயங்கள் விற்பனை செய்யப்படும்.
பிரதமர் நரேந்திர மோடி உரை
உலகிலேயே மிக அதிகமாக தங்கம் வாங்கும் வாடிக்கையாளர்களை உடைய நாடாக, நாம் விளங்குகிறோம். நம் நாட்டில் உள்ளவர்களின் வீடுகளில், 20 ஆயிரம் டன் தங்கம் உள்ளது. இவை பயன்படுத்தப்படாமல், வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றன. இதனால் தான், நம் நாடு, தொடர்ந்து, ஏழை நாடாகவே உள்ளது.
சில சரியான நடவடிக்கைகளை எடுத்து, மாற்று வழிகளை நடைமுறைப்படுத்தினால், ஏழ்மை நாடு என்ற அடையாளத்தை மாற்ற முடியும். இதற்கு, இந்த தங்க திட்டங்கள் மிகவும் உதவியாக இருக்கும். இந்த பொன்னான வாய்ப்பை, பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும்.இந்த திட்டங்களை தீவிரமாகச் செயல்படுத்துவதன் மூலம், தங்க இறக்குமதி அளவை கணிசமாகக் குறைக்க முடியும்.
நம் நாட்டின் சேமிப்பு கலாசாரத்தில் தங்கத்துக்கு முக்கிய பங்கு உள்ளது. இங்கு, பெண்களுக்கு போதிய அதிகாரமும், உரிமையும் அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால், பெண்களின் பெயரில் தங்கம் உள்ளது. அந்த தங்கம் தான், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.
நாம், தங்கத்தை பாதுகாக்கிறோம். அவற்றை, நம், தாய் மற்றும் சகோதரிகளுக்கு வழங்குகிறோம். இன்று துவங்கப்பட்டுள்ள தங்க திட்டங்கள் வெற்றி பெற்றால், அதில், பெண்களுக்கு தான் முக்கிய பங்கு உள்ளது.இவ்வாறு அவர் பேசினார். இந்த விழாவில், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.